“மருதம்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுரங்கம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்து வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தை வந்தடைந்தது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னை நகரம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வழித்தடம் 5 மொத்தம் 47 கி.மீ நீளம் கொண்டது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, “மருதம்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுரங்கம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்து வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தை வந்தடைந்தது. கடந்த 24.04.2026 அன்று வில்லிவாக்கம் இரயில்வே மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் பேருந்து நிலைய மெட்ரோ இரயில் நிலையத்தை நோக்கித் தொடங்கப்பட்ட இந்தச் சுரங்கப்பாதை பணி, மொத்தம் 601 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது.
வில்லிவாக்கம் இரயில் நிலையத்தில் உள்ள 5 இரயில்வே தண்டவாளங்களுக்கு அடியிலும், குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த பகுதியிலும் பாதுகாப்பாகச் சுரங்கம் தோண்டுவது இந்தப் பணியின் போது எதிர்கொள்ளப்பட்ட முக்கிய சவால்களாகும். இருப்பினும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்தவொரு இடையூறும் இன்றி இச்சாதனை வெற்றிகரமாக எட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியேசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திரு. எஸ். அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), திரு. கே. குருசாமி (உயர்மட்ட மற்றும் சுரங்கப்பாதை கட்டுமானம்), இணைப் பொது மேலாளர் திரு. எம். கார்த்திகேயன் (சுரங்கப்பாதை கட்டுமானம்) ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. கே. ரமேஷ் மற்றும் திட்ட மேலாளர் திரு. நத்தபோங் கட்கேவ் ஆகியோரும், பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு. டோனி பர்ச்செல் மற்றும் தலைமை பொறியாளர் திரு. ஏ. உதயகுமார் ஆகியோரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் (JICA) நிதி உதவியுடன் டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் வழித்தடம் 5-ன் சுரங்கப்பாதை பகுதியில் 5 மெட்ரோ இரயில் நிலையங்கள், 2 சாய்வுப் பாதைகள் (Ramps) என மொத்தம் 7.88 கி.மீ தூரத்திற்கான சுரங்கப்பாதை பணிகள் இதில் அடங்கும்.
இந்த சாதனை, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் 5 இரயில்வே பாதைகளின் கீழே செல்லும் முதல் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் நிறைவைக் குறிக்கிறது. மேலும், இதன் மூலம் 5-வது வழித்தடத்தில் மொத்தம் 2.67 கி.மீ தூர சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இது, சென்னையின் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பான, நிலையான மற்றும் திறன்மிக்க நகர்ப்புற போக்குவரத்தை வழங்குவதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.